இசை அமைப்பாளர் : அணில் ஸ்ரீனிவாசன்
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
ஆண் : கனாக்கண்டேன் பெண்பாவாய்
கனாக்கண்டேன்
நிலாக்கால இரவில் தென்றல்
நீந்திவரும் பொழுதில்
கனாக்….கண்டேன்
ஆண் : வளர்முலைப் பெண்டிர்
வரிசைத்தட் டேந்திவர
தளர்நடை மாதர் தாங்கி வழியூர
வளர்பிறைப் பெண்ணாள்
வந்தென் இடம்பிடிக்கக்
கிளர்மனம் களிகொள்ளக்
கனாக்கண்டேன்… பெண்பாவாய்
ஆண் : வாழை யிளம்பச்சை
வரித்ததோர் ஆடையிலே
தாழை நறுங்குழல் தையலாள் வீற்றிருக்க
ஏழை ஒருவன்
எழுகோடிப் பொன்கொண்ட
பேழை கண்டதுபோல்
பித்துற்றேன் பெண்பாவாய்
ஆண் : உயிரே என்பேனோ
உள்ளத்தில் வேர்கொண்ட
பயிரே என்பேனோ
பசிகண்டான் நிறைசெய்த
வயிறே என்பேனோ
வாழ்வினைக் கட்டுவித்த
கயிறே என்பேனோ
கருத்தழிந்தேன் பெண்பாவாய்
ஆண் : எங்ஙனம் முன்னோர்
இயற்றி வகுத்தாரோ
அங்ஙனம் மேடை அமைத்த பந்தற்கீழ்
எங்கணும் வாழ்த்தொலி
எழுந்து நலம்பரப்பக்
கங்கணம் கட்டக்
கனாக்கண்டேன் பெண்பாவாய்
ஆண் : வான்பூட்டும் வில்லின்
வண்ணத் திருவுடையாள்
தேன்பூட்டும் இதழாள்
தெய்வத் திருக்கழுத்தில்
பூண்பூட்டிச் செய்த
பொற்சரடு நானேந்தி
நாண்பூட்டக் கனாக்கண்டேன்
நல்லாய் பெண்பாவாய்
ஆண் : கனாக்கண்டேன் பெண்பாவாய்..பாவாய்
பெண்பாவாய்….